Saturday, December 31, 2011
மங்காத்தா படத்திற்குதான் முதலிடமா? 2011 பற்றி ஒரு அலசல்
தியேட்டர் கேன்டீனில் சுட சுட வைக்கப்பட்ட மசால் வடை, அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் தன் ஆவியை போக்கிக் கொள்வதை போல, உள்ளே ஓடிக் கொண்டிருக்கும் சில படங்களும் நாலாவது ரீலிலேயே தனது ஆவியை போக்கிக் கொள்ளும். ஆனால் அதே படத்தை வரலாறு காணாத வசூல் என்று விளம்பரப்படுத்துவார்கள். அதையும் நம்பி நமக்கு கமெண்ட் அனுப்பி கவலைப்படுவார்கள் ரசிகர்களும் வாசகர்களும். (ராஜபாட்டையை தோல்விப்படம் என்று நாம் எழுதியது பொறுக்க முடியாத வாசகர்கள் சிலர், முதல் சில நாட்களிலேயே வசூல் 42 கோடியை கிராஸ் பண்ணிவிட்டது. அது தெரியுமா உங்களுக்கு? என்றெல்லாம் எழுதுவதை படித்தால், ஐயோ பாவம் என் அறியா ஜனங்களே என்று கவலைப்படவே தோன்றுகிறது)
கடந்த வருடத்தின் சூப்பர் டூப்பர் ஹிட் என்று 'மங்காத்தா' படத்தைதான் மாய்ந்து மாய்ந்து எழுதிக் கொண்டிருக்கின்றன சில ஊடகங்களும், மற்றும் சில விமர்சகர்களும். அப்படி எழுதுவதற்கு முன் குறிப்பிட்ட அந்த படம் தயாரிப்பாளர், விநியோகஸ்தர், திரையரங்க உரிமையாளர் ஆகிய மூவருக்குமே லாபத்தை ஏற்படுத்திய படமா என்று விசாரித்து எழுதினால் புண்ணியமாக போயிருக்கும். இந்த இடத்தில் வசூலையும் முதலீட்டையும் ஒப்பிட வேண்டியதும் மிக மிக முக்கியம்.
நு£று கோடி செலவு செய்து பத்து கோடி லாபம் பார்க்கிற படத்தைவிட, ஏழு கோடி செலவு செய்து பத்து கோடி லாபம் பார்க்கிற படம்தான் சூப்பர் டூப்பர் ஹிட் என்ற உண்மையை புரிந்து கொள்ள கணக்கில் சூரப்புலியாக இருக்க வேண்டும் என்ற அவசியமெல்லாம் இல்லை.
சரி... மங்காத்தா மேட்டருக்கு வருவோம். கோடம்பாக்கத்திலிருக்கும் சில வியாபார புள்ளிகளிடம் விசாரித்தால் நமக்கு கிடைக்கிற தகவல் அதிர்ச்சியை அளிக்கிறது. இந்த படம் விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்கத்திற்கும் பெருத்த லாபத்தை பெற்றுக் கொடுத்தது உண்மையே. ஆனால் தயாரிப்பாளருக்கு சுமார் ஏழு கோடி நஷ்டமாம்.
கடந்த வருடத்தில் தயாரிப்பாளர், விநியோகஸ்தர், தியேட்டர் உரிமையாளர் ஆகிய மூன்று தரப்புக்கும் லாபத்தை கொட்டிக் கொடுத்த படங்கள் என்று எடுத்துக் கொண்டால் நான்கே நான்குதான். காஞ்சனா, கோ, சிறுத்தை, மற்றும் எங்கேயும் எப்போதும். இந்த நான்கு தவிர வெளிவந்து வெற்றி பெற்ற படங்களில் சில இந்த மூவரில் ஒருவரை நுரை தள்ள வைத்த படங்கள் என்பதுதான் ஜீரணிக்க முடியாத உண்மை.
இப்படி ஒரு குழப்பமான வெற்றியை தந்த படங்கள்தான் வேலாயுதமும், 7 ஆம் அறிவும் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.
அசல் மட்டும் தேறிய படங்களில் ஒன்று போராளி. கடந்த வருடத்தில் அதிசயமாக தேறிய டப்பிங் படம் ஒன்று மாவீரனாம். இதுவும் விநியோகஸ்தர் ஒருவர் சொல்கிற கணக்குதான்.
கூட்டி கழித்து குப்புறத் தள்ளி, நிமர்த்தி வளைத்து படுக்க வைத்து பார்த்தாலும் 2011 ன் லட்சணம் டாப் 5 என்ற அளவிலேயே நின்று போனதுதான் வேதனை கலந்த ஆச்சர்யம்.
-ஆர்.எஸ்.அந்தணன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment